காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்கள் பரவும் அபாயம்: பாதாள சாக்கடை அமைக்கவும் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் மையப்பகுதி காந்தி சாலை இரும்பு கடை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்கள் பரவுவதாகவும், அதனால், பாதாள சக்கடை அமைத்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் நிஷான் தர்காவில் அமைந்துள்ள இரும்பு கடை சந்து தெருவை சேர்ந்த பொதுமக்கள், சையத் அப்துல் ரஹீம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

அந்த மனுவில், காஞ்சிபுரம் காந்தி ரோடு இரும்பு கடை சந்து தெருவில் (எ) சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை உள்ளது. தற்போது, அது பழுதடைந்து சுமார் 10 ஆண்டு காலமாக கழிவுகள் தேக்கமடைந்து கழிவுநீர் செல்ல முடியாமல் கழிவுநீர் குளமாக நிற்கிறது. இதனால், துர்நாற்றமும், தெருவில் சில தாழ்வான வீடுகளில் கழிவுநீர் புகுந்து கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லையாக இருக்கிறது.

மேலும், கழிவுநீர் தாழ்வான வீடுகளில் தேங்குவதால், பொதுமக்களுக்கு நோய்கள் பரவுகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் குறுகிய தெரு என்பதால் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சியிடம் தெருவாசிகள் புகார் கொடுத்தால் மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் வாகனத்தை கொண்டுவந்து கழிவுநீரை உறிஞ்சி விட்டு சென்று விடுகின்றனர். மறுபடியும் சில நாட்களில் இந்த கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது. ஆகவே, காஞ்சிபுரம் மாநகராட்சி உயர் அலுவலர்களுக்கு புதிய பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்கள் பரவும் அபாயம்: பாதாள சாக்கடை அமைக்கவும் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: