ஜெர்மன் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் சீன வௌியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் சீன வௌியுறவுத்துறை அமைச்சர் வாங் லியுடன் ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேக்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா – சீனா இடையே எல்லை தகராறு ஏற்பட்டது. லடாக்கில் அத்துமீறிய சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இதில் இருநாட்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அப்போது முதல் இந்தியா – சீனா எல்லை பிரச்னை நீடிக்கிறது. இருநாடுகளிடையேயான எல்லை பிரச்னையை தீர்க்க பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் பயனில்லை.

இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – காசா போர் மற்றும் பல்வேறு நாடுகளின் உள்நாட்டு போர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் சீன வௌியுறவுத்துறை அமைச்சர் வாங் லியை எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா – சீனா பிரச்னை நீடிக்கும் நிலையில், கடைசியாக இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆனால் இதில் இருநாட்டு அமைச்சர்களும் பேசிய விவரங்கள் வௌியாகவில்லை. மேலும் போலந்து வௌியுறவுத்துறை அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகள், உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ஆலோசனை நடத்தினார். பாலஸ்தீன வௌியுறவு அமைச்சர் ரியாத் அல் – மாலிக்கையும் அவர் சந்தித்து பேசினார். இதேபோல் அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜெர்மனி வௌியுறவுத்துறை அமைச்சர் அனலினா பியார் பக் உள்பட பல்வேறு நாடுகளின் வௌியுறவுத்துறை அமைச்சர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கர் விவாதித்தார்.

The post ஜெர்மன் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் சீன வௌியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: