பிரதமர் மோடி தொகுதியில் ராகுல் பிரமாண்ட பேரணி

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் ராகுல் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நேற்று முன்தினம் மாலை உத்தரபிரதேசத்துக்குள் நுழைந்தது. நேற்று மோடியின் வாரணாசி தொகுதியில் நுழைந்த ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி, திறந்த வேனில் நின்றவாறு குடாலியா பகுதியை சுற்றி பார்த்தார்.

பின்னர் அங்கிருந்த மக்களை சந்தித்து உரையாடிய ராகுல் காந்தி, “இந்தியா அன்பின் நாடு. வெறுப்பின் நாடல்ல. சகோதரர்களுக்கிடையேயான மோதலால் நாடு பலவீனமடையும். தற்போது இரண்டு இந்தியா உள்ளது. ஒன்று பணக்கார்களுக்கான இந்தியா, மற்றொன்று ஏழைகளுக்கானது. நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைகளை ஊடகங்கள் காட்டுவதில்லை. மாறாக 24 மணி நேரமும் மோடியையும், ஐஸ்வர்யா ராயையும் காண்பிக்கின்றன. நாட்டின் பிரச்னைகள் பற்றி ஊடகங்கள் கவலைப்படுவதில்லை” என்று தெரிவித்தார். இன்று பிற்பகல் 3 மணிக்கு உத்தரபிரதேசம் பிரயக்ராஜில் ராகுலின் யாத்திரை தொடங்க உள்ளது. வாரணாசியில் நடந்த யாத்திரையில் அப்னா தளம்(காமராவாடி) தலைவர் பல்லவி படேல், சிரத்துவின் சமாஜ்வடிகட்சி(எஸ்பி) எம்.எல்.ஏவும் இணைந்தனர். சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் யாத்திரை நுழையும்போது அதில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.

 

The post பிரதமர் மோடி தொகுதியில் ராகுல் பிரமாண்ட பேரணி appeared first on Dinakaran.

Related Stories: