வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி: கோயம்பேட்டில் பரபரப்பு

கோயம்பேடு: வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இது, கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி (38), சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர், தினமும் விருகம்பாக்கம் பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் சென்ட்ரல் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு 9.30 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து விருகம்பாக்கம் செல்வதற்கு நடந்து சென்றபோது பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் திடீரென்று ரேவதி கழுத்தில் கிடந்த 6 சவரன் செயினை பறிக்க முயன்றுள்ளார். உடனே, ரேவதி தடுத்து கையில் செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வாலிபருடன் போராடினார்.

இதனால், தன்னை பொதுமக்கள் எங்கு பிடித்து விடுவார்களோ என்று பயந்து போன அந்த வாலிபர் ரேவதியை கீழே தள்ளிவிட்டு செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். அதற்குள் பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிலிப்ஸ் (30), கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதும், போதுமான வருமானம் இல்லாததாலும், மது அருந்த பணம் தேவைப்பட்டதாலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் இருந்து 6 சவரன் செயினை பறிமுதல் செய்தனர். பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி: கோயம்பேட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: