முடிவுக்கு வந்தது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்னை இரண்டாவது வரிசைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாற்றம்: ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் இடம்

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்னை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகே ஆர்.பி.உதயகுமாருக்கு இடம் ஒதுக்கீடு செய்து சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுத்துள்ளார். ஓபிஎஸ்சுக்கு 2வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக எதிர்க்கட்சியானது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தனர்.

சட்டப்பேரவையில் இவர்கள் இருவருக்கும் முன் வரிசையில் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நாளடைவில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் வரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி அருகே ஓ.பன்னீர்செல்வம்தான் அமர்ந்து இருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம். அதனால் அவருக்கு முன் வரிசையில், எனது இருக்கை அருகே இடம் ஒதுக்கி தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து பேரவையில் பேசி வருகிறார். நீங்களும் (சபாநாயகர்) அதிமுக ஆட்சியில் சபாநாயாகராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ, அதை சுட்டிக்காட்டி பதில் சொல்லியுள்ளீர்கள். இருந்தாலும், நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்றார்.

இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று முன் வரிசையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகே எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு நேற்று இருக்கை ஒதுக்கப்பட்டது. மேலும், முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரண்டாவது வரிசையில் முன்னாள் சபாநாயகர் என்.ஆர்.தனபாலன் அருகே இருக்கை ஒதுக்கினார். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் நேற்று, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்வரிசையில் எடப்பாடி பழனிசாமி அருகே அமர்ந்தார்.

பல மாத போராட்டத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அப்பாவு எடுத்த நடவடிக்கை மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவைக்கு வரவில்லை. அதேபோன்று, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 2வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும் எம்எல்ஏவாக தொடர்கிறார். அவருக்கு 3வது வரிசையில் முன்னாள் அமைச்சர் நாசர் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

The post முடிவுக்கு வந்தது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்னை இரண்டாவது வரிசைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாற்றம்: ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் இடம் appeared first on Dinakaran.

Related Stories: