பூந்தமல்லி: சென்னை அருகே திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இக்கோயிலின் கருவறையை சுமார் 4 அடி உயரம் அதிகரித்து, கருங்கற்களால் கட்டப்பட உள்ளது. இதற்காக மூலவர் அம்மனை பாலாலயம் செய்து, அருகிலேயே புதிதாக கட்டப்பட்ட தற்காலிக தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்பு பூஜைகளும் யாகங்களும் கடந்த 11ம் தேதி விநாயகர் பூஜை மற்றும் நவக்கிரக பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, புதிய சன்னதியில் இன்று காலை மூலவர் அம்மனுக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நாளை (15ம் தேதி) நான்கு கால பூஜைகளுடன் கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, புதிய சன்னதியில் தற்காலிக மூலவர் அம்மனுக்கு லகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், மூலவர் அம்மனை பக்தர்கள் எவ்வித தடையுமின்றி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் நேற்றிரவு நடைபெற்ற பூஜையில் கோயில் இணை ஆணையரும் செயல் அலுவலர் அருணாசலம் தலைமை தாங்கினார். கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் டெக்கான் மூர்த்தி, அறங்காவலர்கள் சந்திரசேகரசெட்டி, கோவிந்தசாமி, வளர்மதி, சாந்தகுமார், முன்னாள் அறங்காவலர்கள் லயன் ரமேஷ், ஐசிஎப் துரைராஜ், திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்இகே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
The post திருவேற்காட்டில் நாளை கருமாரியம்மன் கோயில் கருவறை லகு கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.