கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பொம்மை துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டம்

 

கோவை, பிப். 13: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு பொம்மை துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் குறைகள் தொடர்பான கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.

கோவை செல்வபுரம் எஸ்.எஸ் மக்கள் சேவை பணி அமைப்பு செயலர் குப்புசாமி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் ஒரு கிலோ ரூ.29க்கு பாரத் அரிசியை 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு சில மாநிலங்களுக்கு பாரத் அரிசி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பாரத் அரிசி வரவில்லை. எனவே ஒன்றிய அரசு தமிழகத்துக்கு விரைவில் பாரத் அரிசியை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கையில் பொம்மை துப்பாக்கியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், பாதுகாப்புக்காக நாங்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவிடம் அளித்து விட்டு சென்றனர். முன்னதாக முகாமையொட்டி கலெக்டர் அலுவலக வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் மனு அளிக்க வந்த பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

The post கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பொம்மை துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: