விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு


டெல்லி: டெல்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதாக கொடுத்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. இந்நிலையில் மீண்டும் பிப்ரவரி 16 அன்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமையில் டெல்லியை நோக்கி விவசாயிகள் மாபெரும் பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி – ஹரியானா எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இப்போராட்டம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் ஒன்றிய அரசு வேளாண் சட்டத்தினை ரத்து செய்தது. இந்நிலையில் தற்போது பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளும் ஒரு சில கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளை (13.2.2024) டெல்லியை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் தேவை. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் நீக்கப்பட வேண்டும் என்று போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இதற்காக பஞ்சாபில் இருந்து 2000 டிராக்டர்கள், உ.பி யில் இருந்து 500, ராஜஸ்தானில் இருந்து 200 டிராக்டர்களில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லி நோக்கி செல்ல திரட்டுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் இன்று முதல் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

The post விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: