பால் முதல் பழம் வரை எதையும் விட்டு வைக்கல? உயிரை பலி வாங்கும் உணவு கலப்படம்: விதிமீறும் வியாபாரிகள்

* மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

* அதிகாரிகள் வேண்டுகோள்

மனிதனின் வாழ்க்கை முறை தொடர்ந்து பல்வேறு வகையில் மாற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக உணவு முறையில் சொல்ல முடியாத அளவிற்கு பல மாற்றங்கள் அடைந்துள்ளது. புதிய புதிய உணவுகள், அந்நிய நாட்டு உணவு என தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கிறது. இதனால் உடலுக்கு பல்வேறு தீங்கு என்று தெரிந்தும் மக்கள் அதனை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இது ஒரு பக்கம் மனித உடலில் தீங்கு ஏற்படுத்த, உணவு கலப்படம் என்பது மற்றொரு பக்கம் தீங்கு ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் காலையில் குடிக்கும் பால் முதல் இரவு உண்ணும் பழம் வரை அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம் உள்ளது.

ஒரு பொருளில் அதே போன்று செயற்கை அல்லது இயற்கை பொருளை கலந்து எளிதில் பிரிக்க முடியாதவாறு விற்பதே உணவு கலப்படம் என கூறப்படுகிறது. இந்தக் கலப்படம், சுத்தமான மூலப் பொருளின் தரத்தைக் குறைப்பதோடு, மக்களின் உடல்நலப் பாதிப்பையும் தீராத நோய்களையும் ஏற்படுத்தும். மேலும் மனிதர்கள் உண்ணும் உணவு பொருட்களை விஷப் பொருளாக மாற்றி உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.  இந்த கலப்படம் 2 வகையாக நடைபெறுகிறது. ஒன்று இயற்கை பொருட்களை பயன்படுத்தி உணவு பொருட்களில் கலப்பது, மற்றொன்று செயற்கையான ரசாயனத்தை உணவு பொருட்களில் கலப்பது என இரண்டு வகையாக உணவு கலப்படம் நிகழ்ந்து வருகிறது.

உலகளவில் 57 சதவீதம் தனிநபர்கள் கலப்பட உணவுகளை உட்கொள்வதால் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். ஆய்வுப்படி, ஆண்டுதோறும் சுமார் 22சதவீதம் உணவுகள் கலப்படம் செய்யப்படுகின்றன. இந்த கலப்படங்களால் மனித ஆரோக்கியம் மோசமாகப் பாதிக்கப்படுகிறது, மேலும் உணவுப் பொருட்கள் சேதமடையும் போது, ​​மக்கள் தயாரிப்பின் தரம் மற்றும் பாதுகாப்பில் நம்பிக்கை இழக்கிறார்கள். உணவில் கலப்படம் ஏற்படுத்த முக்கிய காரணம் அதிக லாபத்தில் நிறைய பொருட்களை விற்க வேண்டும்,

உணவு பொருட்களின் தரம் வேண்டாம், குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும், மக்களின் உடல்நலம் குறித்து கவலை இல்லை என சில வியாபாரிகள் சுயநலமாக யோசிப்பதின் விளைவாக இது நடைபெறுகிறது. கலப்படம் செய்யப்பட்ட உணவை உட்கொள்வதால் இறப்பதற்கு கூட வாய்ப்புள்ளது என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

மக்கள் தினமும் பயன்படுத்த கூடிய பால் பொருள்கள், அரிசி, பற்பசை, காபி கொட்டைகள், தேயிலைத் தூள், இனிப்புப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், குளிர்பானங்கள், தேன் அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது. உணவில் கலப்படம் 2 வகையாக கலக்கப்படுகிறது. இயற்கையாக பொருட்களை பயன்படுத்தி உணவு பொருட்களில் கலப்பது, எடுத்துக்காட்டு பப்பாளி விதையை கடுகில் கலப்பது போன்று பல்வேறு உணவு பொருட்களில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து கலப்படம் செய்வது.

அதேபோல செயற்கை கலப்படம் என்பது வேதியல் ரசாயனத்தை உணவு பொருட்களில் கலப்பது. குறிப்பாக சாயத்திற்காக பயன்படுத்தப்படும் தொழிற்சாலை ‘டை’ யை உணவு பொருட்களில் கலப்பது. இந்த இரண்டு வகையான கலப்படமும் மனித உடலுக்கு மிகவும் தீங்கை ஏற்படுத்தும்.
அதுவும் வேதியல் ரசாயனம் உணவில் கலப்பதால் பல்வேறு ஒவ்வாமை ஏற்படும். குறிப்பாக தொழிற்சாலையில் பயன்படுத்தக்கூடிய டை-யை உணவு பொருட்களில் கலந்து குழந்தைகளை கவர வேண்டும், அதிக லாபம் பெற வேண்டும் உள்ளிட்ட காரணத்தால் சுயநலமாக நஞ்சு என்று தெரிந்தும் உணவு பொருட்களில் சிலர் கலந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த உணவு பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, குடல் புண் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பை அந்த ரசாயன செல் ஏற்படுத்தும். மேலும் அவை அதிகளவில் நமது செல்களில் கலந்து மூளைக்கு சென்று மனிதனை உணர்விழக்கவும், முழு மயக்க நிலை (கோமா) அல்லது சில நேரங்களில் இறப்பிற்கும் கூட வழிவகுக்கிறது. இயற்கை கலப்படத்தில் வாந்தி, வயிற்றுபோக்கு, தோல்வியாதி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை அது உண்டாக்கும். இரண்டு வகை கலப்படமும் உடலுக்கு தீங்கு தான்.

கலப்படம் தொடர்பாக மக்களுக்கு முடிந்த அளவிற்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். மேலும் சிறு வியாபாரிகள் முதல் பெரிய முதலாளிகள் வரை அனைத்து வகையான உணவகம் மற்றும் உணவு தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை அளித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கலப்படம் நிறைந்த பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் மக்கள் எங்களிடம் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவர்கள் விவரத்தை நாங்கள் ரகசியமாக வைத்து இருப்போம். மேலும், இதுபோன்ற கலப்பட பொருட்களை தவிர்த்து உடலுக்கு நன்மை பயக்கும் இயற்கை உணவுகளை உண்பதே சாலச்சிறந்ததாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழகத்தில் உணவகத்தில் சாப்பிடத் தகுதியற்ற உணவு அல்லது கலப்பட உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், முதலில் அந்த பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். தற்காலிகமாக அந்த இடத்திற்கு சீல் வைத்து நோட்டீஸ் மூலம் விளக்கம் கேட்கப்படும். அவர்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் எச்சரிக்கை அளித்து அபராதம் மட்டும் விதிக்கப்படும். அப்படி 15 நாட்களில் விளக்கம் அளிக்காமல் இருந்தால் அந்த இடம் நிரத்தரமாக மூடப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும். சில முறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். அவருடைய கடை மூடப்படுவதோடு, சிவில் கோர்ட்டு மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்.

* புகார் அளிக்கும் விவரம்
கலப்பட பொருட்களை விற்பனை செய்வது அல்லது உணவகத்தில் உணவு முறையாக இல்லை என்றால் தமிழக உணவு பாதுகாப்பு துறை 9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் unavupugar@gmail.com அல்லது foscos என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

* கலப்பட பொருட்களை தவிர்ப்பது எப்படி?
வீட்டு உணவை உட்கொள்ள வேண்டும். வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையில் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்க வேண்டாம். சூடாக சமைத்த உணவை உட்கொள்ள வேண்டும். எப்போதும் லேபிள்களில் இருப்பதை படிக்க வேண்டும். குறைந்த எண்ணெய் உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். கலர் சேர்க்கப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும்.

The post பால் முதல் பழம் வரை எதையும் விட்டு வைக்கல? உயிரை பலி வாங்கும் உணவு கலப்படம்: விதிமீறும் வியாபாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: