மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சோதனை ஓட்டம் பைப் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் 187, பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் 188 ஆகிய 2 வார்டுகளுக்கு கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி திட்டத்தின் மூலம், குடிநீர் வழங்க 2019ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பில் பள்ளிக்கரணை கைவேலி அருகே வேளச்சேரி மெயின் சாலை ஒட்டியுள்ள அரசு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை தொட்டி மற்றும் குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கவும், ரூ.80.45 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019 பிப்ரவரியில் பணிகள் தொடங்கின.

2021 ஜனவரியில் பணி முடிக்கப்பட்டு, மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டதால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கடும் சிரமம் ஏற்பட்டது. கடந்த மாதம், பணிகள் அனைத்தும் முடிவுற்றது. அடுத்த வாரம் இதற்கான தொடக்கக்க விழா நடக்க உள்ளது. இந்நிலையில், துவக்க விழாவுக்கான சோதனை ஓட்டமாக, நேற்று மாலை 3.30 மணியளவில், மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் சில நொடிகளில், இணைப்பு குழாய்களில் பிளவு ஏற்பட்டு, கடும் அழுத்தத்துடன் பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால், வேளச்சேரி – தாம்பரம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், வேடிக்கை பார்த்து, வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.இதையடுத்து துரிதமாக செயல்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அரை மணி நேரத்தில் சரிசெய்தனர். பின்னர் மீண்டும் சோதனை ஓட்டம் துவங்கியது.இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, 900 மி.மீ., விட்டம் உடைய குழாய் வழியாக நீர் வெளியேறியபோது, இரு குழாய்களுக்கு இடையேயான, இணைப்பு ‘ரப்பர் கேஸ்கட்’ பழுதடைந்ததால், அவ்வழியாக நீர் வெளியேறியது. மேல்நிலை தொட்டியில், 30 லட்சம் லிட்டருக்கும், அதிகமான நீர்த்தேக்கி வைக்கப்பட்டிருந்ததால், உயரழுத்தம் காரணமாக, சாலை வரையில் நீர் பீய்ச்சி அடித்தது. அதிகாரிகள், ஊழியர்கள் அருகிலேயே இருந்ததால், உடனடியாக மேல்நிலை தொட்டியில் உள்ள திறப்பான் அடைக்கப்பட்டு, இணைப்பு குழாயில் இருந்த பழைய ‘ரப்பர் கேஸ்கட்’ நீக்கப்பட்டு, புதியது பொருத்தப்பட்டு சரி செய்யப்பட்டது” என்றார்.

The post மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சோதனை ஓட்டம் பைப் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: