டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துள்ளார். திருப்பதி வெங்கடாசலபதி திருவுருவ சிலையை ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். ஆந்திராவில், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி கண்டது. இதேபோல மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 151 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திர முதலமைச்சராக வரும் 30-ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்.

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல தலைவர்களை அழைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். அதன்படி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார். அப்போது அவரைக் கட்டித்தழுவினார் மோடி. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். மோடியும் ரெட்டிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர், தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். அப்போது, அவருடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் விஜயசாய் ரெட்டி உட்பட சிலர் உடனிருந்தனர்.

The post டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: