மாவட்டத்தில் காலியாக உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 57 மருத்துவர்கள் நியமனம்

*மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 57 மருத்துவர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் ம.சுப்பிரமணியன் ஊட்டியில் தெரிவித்தார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஊட்டியில் ரூ.145 கோடி செலவில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டது.அங்கு கட்டுமான பணிகள் முடிந்து கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியை ஒட்டியே மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ரூ.134 கோடியே 23 லட்சம் செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

மருத்துவமனை கட்டுமான பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதேபோல், ரூ.181 கோடியே 45 லட்சம் செலவில் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கும் குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.இப்பணிகளும் முழுமை அடையும் தருவாயில் உள்ளது. மாணவியர்கள் தங்கும் விடுதி ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.மருத்துவமனை கட்டுமான பணிகள் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் முழுமையாக முடித்து தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமவெளிப் பகுதிகளில் இது போன்ற பெரிய கட்டிடங்கள் கட்டுவது எளிது.

ஆனால், நீலகிரி மாவட்டத்தில், எப்போதும் மழை பெய்து வரும் நிலையிலும்,மண் சரிவுகள் போன்ற பிரச்னைகள் உள்ள போதிலும், பொதுப்பணித்துறையினர் சாமர்த்தியமாக இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த மருத்துவ கல்லூரிக்கு குடிநீர் வசதிக்காக மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

700 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனைக்கு தண்ணீர் அதிகளவு தேவைப்படும்.எனவே, அதற்கு ஏற்றார் போல், ரூ.43 கோடி செலவில் புதிதாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.குடிநீர் குழாய்கள் அமைக்க வனத்துறையினர் அனுமதி பெறுவது, ரூ.43 கோடிக்கு டெண்டர் பெறுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்தவுடன், தமிழ்நாடு முதல் அமைச்சர் இந்த புதிய மருத்துவமனையை திறந்து வைப்பார்.

இந்தியாவில் உள்ள மலை மாவட்டங்களில் அதிகபட்சமாக படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக ஊட்டியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கும். இந்தியாவிலேயே மலை மாவட்டங்களில் இரு இடங்களில் மட்டுமே மருத்துவக்கல்லூரி உள்ளது.ஒன்று சிம்லா. தற்போது ஊட்டியில் கட்டப்பட்டுள்ளது. மேலும்,கூடலூரில் தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.ரூ.31 கோடியில் அந்த மருத்துவமனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு நடந்து வரும் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு பகுதியில், ரூ.60 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் திறக்கப்படவுள்ளது. அதேபோல், இத்தலார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கான குடியிருப்புகள் ரூ.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.அதனையும் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும், மசக்கல் பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதனையும் திறந்து வைக்கப்படவுள்ளது. சமவெளிப் பகுதிகளில் இருந்து ஊட்டியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் நியமித்தால், அவர்கள் பணியில் இருப்பதில்லை. பணி மாறுதல் பெற்றுக் கொண்டுச் செல்கின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதனை களையும் வகையில் தற்போது தமிழ்நாட்டில் 1021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 57 மருத்துவ பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில், 55 பேர் ஊட்டியில் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் பணியில் சேர்ந்து விடுவார்கள்.மேலும், இவர்கள் ஓராண்டு காலம் பணி மாறுதல் பெறாமல்,இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிட உள்ளனர் என்றார். இந்த ஆய்வின் போது, சுகாதாரத்துறை செயலார் ககன்சிங்பேடி,கலெக்டர் அருணா,மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்,அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் உடனிருந்தனர்.

The post மாவட்டத்தில் காலியாக உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 57 மருத்துவர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: