குரூப் 4 பதவிக்கான தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில்குரூப் 4 பதவிக்கான போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் போன்றவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 4 தேர்விற்கு 6,244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த முறை இத்தேர்வுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் 3,720 மாணவர்கள் கலந்து கொண்டதன் மூலம் 406 பேர் தேர்ச்சி பெற்று அரசுப்பணி புரிந்து வருகின்றனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முதற்கட்டமாக சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நேற்று துவக்கி வைத்தார்.

இதில், 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “இப்பயிற்சி வகுப்புகள் வேலை நாட்களில் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களும் அந்ததந்த மாவட்டயங்களில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்” என்றார்.

The post குரூப் 4 பதவிக்கான தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: