ஒன்றிய அரசு ‘0’ நிதி வழங்கியதால் திமுக நூதன பிரசாரம்: அல்வா மாவட்டத்திலேயே பாஜவுக்கு அல்வா கொடுத்த ஆர்.எஸ்.பாரதி; வீடு வீடாக  சென்று மக்களுக்கு வழங்கினர்

தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்காமல் புறக்கணிப்பதை கண்டித்து, ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்பட்டாதமல் மக்களுக்கு தமிழக அல்வா கொடுப்பதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று மக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடந்தது. சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்திற்கு வந்த பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு அல்வா வழங்கினர். அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீசில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ‘ஜீரோ’ என அச்சடித்து உள்ளனர். திமுகவினரின் நூதன போராட்டம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

சில இடங்களில் வீடு, வீடாக சென்றும், பஸ்நிலையங்கள், ரயில்நிலையங்கள், கடைகள் என்று பல இடங்களிலும் திமுகவினர் அல்வா கொடுத்து போராட்டம் நடத்தினர். இதேபோல், அல்வாவுக்கு பெயர் போன நெல்லையிலும் அல்வா கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதுவரை வெளிமாவட்ட மக்களுக்கு அல்வா தந்து வந்த நெல்லைக்கே இன்று அல்வா கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை டவுனில் மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் நடந்த போராட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு, தமிழகத்துக்கு ஒன்றிய அரசி அல்வா கொடுப்பதை சுட்டிக்காட்டி மக்களுக்கு அல்வா கொடுத்தார்.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்து படம் போட்டார். கோவிலுக்கு சென்ற அவர் உண்டியலில் பணத்தை போடாதீர்கள், தட்டில் போடுங்கள் என சொல்லிவிட்டு சென்றார். ஆனால் வெள்ள நிவாரணத்திற்காக ஒன்றிய அரசு சல்லி பைசா கூட தரவில்லை. ராஜ்நாத் சிங் வந்து நேரடியாக மழை வெள்ளத்தை பார்வையிட்டார். ஒன்றிய அரசின் அதிகாரிகள் நேரில் வந்து வெள்ளத்தை பார்வையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நிதியும் ஒன்றிய அரசால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படவில்லை. தமிழகத்திற்கு தரவேண்டிய உரிமையை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் கேட்கிறார்.

அவர்களிடம் கெஞ்சவில்லை. ரூ.6 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணம் கொடுத்தால் தமிழகத்துக்கு ஒன்றிய அரசு ரூ.2 லட்சம் கோடி மட்டுமே கொடுக்கிறது. ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே கொடுக்கிறது. ஆனால், உத்திரபிரதேசத்தில் ஒரு ரூபாய் செலுத்தும் வரிக்கு இரண்டு ரூபாயாக திருப்பிக் கொடுக்கிறார்கள். எய்ம்ஸ் தருகிறோம் என்று சொல்லி அல்வா கொடுத்து விட்டார்கள். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கும் ஒன்றிய அரசு அல்வா கொடுத்து விட்டது. ஒன்றிய அரசு கொடுத்த அல்வாவிற்கு பதில் சொல்லும் விதமாக அல்வாவிற்கு பெயர் பெற்ற நெல்லையில் இருந்து மோடிக்கு இந்த தேர்தலில் மக்கள் அல்வா கொடுக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* கணவரின் பேச்சை கேளுங்க நிர்மலாவுக்கு அட்வைஸ்
ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ‘ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது பித்தலாட்ட உரை, ஏமாற்றும் செயல். நிர்மலா சீதாராமனின் கணவரே இந்தியாவின் பொருளாதாரம் என்ன என்பதை தெளிவாக சொல்லியுள்ளார். கணவரின் பேச்சை கேட்டு நிர்மலா சீதாராமன் நடந்தால் நல்லது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து அண்ணாமலை வெள்ளை அறிக்கை கேட்டதற்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி, வெள்ளரிக்காய் வேண்டுமானால் வாங்கி கொடுக்கலாம். நெல்லையில் அதிகம் வெள்ளரிக்காய் கிடைக்கிறது’ என்றார்.

The post ஒன்றிய அரசு ‘0’ நிதி வழங்கியதால் திமுக நூதன பிரசாரம்: அல்வா மாவட்டத்திலேயே பாஜவுக்கு அல்வா கொடுத்த ஆர்.எஸ்.பாரதி; வீடு வீடாக  சென்று மக்களுக்கு வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: