3 மாவட்ட ஆர்டிஓக்களுடன் ஆலோசனை: கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

கோவை, பிப்.8: கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ.146 கோடி மதிப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்களை கொண்ட புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த 2019-ல் துவங்கப்பட்டது. கட்டிடத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் நடந்து வரும் பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, மருத்துவமனையின் டீன் நிர்மலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர். கட்டுமான பணிகள் அறைகுறையாக இருப்பதாக தெரிவித்தவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், மருத்துவமனையின் தொடக்க நிலை இடையீட்டு மையம், சலவையகம், பயிற்சி மருத்துவ மாணவர்கள் விடுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மருத்துவமனையின் சமையறையில் நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்டு, உணவு நன்றாக இருப்பதாக பாராட்டினார். மேலும், டாக்டர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறியதாவது: புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்த தளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மருத்துவமனைகளில், மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் உட்கட்டமைப்பு, பணியிடங்கள் அதிகரிப்பது ஆகியவை நிதி நிலையை பொறுத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு பிற மாநிலங்களைவிட நன்றாக உள்ளது. நோயாளிகளின் வருகையை பொறுத்து தொடர்ந்து உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் 500 படுக்கையுடன் கூடிய மருத்துவமனை குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 3 மாவட்ட ஆர்டிஓக்களுடன் ஆலோசனை: கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: