உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்: தேர்வுக்குழுவுக்கு அனுப்ப காங். வலியுறுத்தல்

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவை ஆய்வு செய்ய தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென காங்கிரஸ் தலைவர் யாஷ்பால் ஆர்யா வலியுறுத்தினார்.
அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்கும் ஒரே மாதிரியான திருமணம், விவகாரம், நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்துரிமை சட்டங்களை அமல்படுத்தும் பொது சிவில் சட்டத்தை பாஜ ஆளும் மாநில அரசுகள் நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

பாஜ ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இறுதி வரைவு மசோதாவை சமீபத்தில் சமர்பித்தது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற உத்தரகாண்ட் சட்டப்பேரவையின் 4 நாள் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.

கூட்டத் தொடரின் 2ம் நாளான நேற்று பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார். அசல் மசோதாவுடன் அவைக்கு வந்த அவரை பாஜ எம்எல்ஏக்கள் மேசையை தட்டியபடி ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘வந்தே பாரதம்’ என கோஷமிட்டு வரவேற்றனர். அதே சமயம் வரைவு மசோதாவை படித்து பார்க்க போதிய அவகாசம் வழங்கப்படாமல் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற பேரவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் யாஷ்பால் ஆர்யா, ‘‘‘‘172 பக்கங்கள் கொண்ட இந்த மசோதாவில் 392 பிரிவுகள் உள்ளன.

இதன் விதிகள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை விரிவாக ஆய்வு செய்ய போதுமான அவகாசம் வேண்டும். இந்தியா ஒரு பன்முக நாடு. வெவ்வேறு மதங்களுக்கு இங்கு 10 வெவ்வேறு சிவில் சட்டங்கள் உள்ளன. எனவே, இந்த மசோதாவின் விதிகளை ஆய்வு செய்ய தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால், ‘‘பல இஸ்லாமிய நாடுகள் கூட பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முஸ்லிம் பெண்கள் கூட பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் செயலை பாராட்டியுள்ளனர்’’ என்றார். விவாதத்தை தொடர்ந்து, இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும். போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தில் இருந்தே கோவாவில் மட்டும் பொது சிவில் சட்டம் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. உத்தரகாண்ட்டைத் தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வர குஜராத், அசாம் மாநிலங்கள் தயாராக உள்ளன.

* லிவ்-இன் ஜோடிகளுக்கு சிக்கல்
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் உத்தரகாண்ட்டில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன் ஜோடிகள் முறைப்படி அரசிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் ஒரு மாதத்திற்கு மேல் லிவ்-இன் உறவில் இருந்தால் அவர்களுக்கு 3 மாத சிறை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும். லிவ்-இன் உறவில் உள்ள பெண் தன் துணையால் கைவிடப்பட்டால் அவர் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. இந்த ஜோடிகளில் யாராவது மைனராக இருந்தால் பதிவு செய்ய முடியாது. மாநிலத்தின் பழங்குடி பிரிவினருக்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

The post உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்: தேர்வுக்குழுவுக்கு அனுப்ப காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: