பாஜக ரகசியமாக பேசி வந்தநிலையில் பாமக ராமதாசுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்திப்பு: 7+1 தொகுதி ஒதுக்குவதாக அதிமுக வாக்குறுதி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, எடப்பாடி பழனிச்சாமியின் தூதுவராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. மேலும் 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்குவதாக அதிமுக வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. டாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார். அதன்பின்னர் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட உள்ளது. அதேநேரத்தில், அதிமுக, பாஜ கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

தேஜ கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணிக்குச் செல்கிறோம் என்பதை அறிவிக்காமல் உள்ளனர். இதனால் அதிமுக, பாஜக என எந்த தலைவர்களையும் அவர்கள் சந்திக்காமல் உள்ளனர். இதனால் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டு வருகிறது. பாஜ மேலிடப்பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, பாமக நிறுவனரை இன்று மாலை 7 மணிக்கு சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை முன்கூட்டியே மோப்பம் பிடித்த அதிமுக, எப்படியாவது பாமகவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்பி, நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து ரகசியமாக பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இருவரும் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது. அப்போது பாமக தரப்பில், 10 மக்களவை இடங்களும், ஒரு ராஜ்யசபாவும் சீட்டும் கேட்டதாக தெரிகிறது. அதிகப்படியாக வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. தர்மபுரி, சிதம்பரம், அரக்கோணம், ஆரணி, சேலம் உள்ளிட்ட தொகுதிகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதிமுகவோ கடந்த முறைபோன்று 7 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்குவது என்று தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால் 10 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி வேண்டும் என்று ராமதாஸ் கூறியதால், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதாக சிவி சண்முகம் கூறியுள்ளார். ஒரு பக்கம் பாஜவுடன் கூட்டணி பேசி வரும் சூழலில், ராமதாசுடன் சி.வி சண்முகம் நடத்திய சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வட மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள பாமகவை இழுக்க இரு கட்சிகளும் போட்டா போட்டி நடத்தி வருகின்றன.

The post பாஜக ரகசியமாக பேசி வந்தநிலையில் பாமக ராமதாசுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்திப்பு: 7+1 தொகுதி ஒதுக்குவதாக அதிமுக வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: