புதிய பேருந்து நிலைய பணியை விரைவில் துவங்க வேண்டும்: மாமல்லபுரம் மக்கள் வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் புதிதாக அமையவிருக்கும் நவீன பேருந்து நிலையத்துக்கான இடங்களை நேற்று செங்கல்பட்டு சார்ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவரிடம் அங்கு விரைவில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துவங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். தமிழ்நாட்டில் யுனெஸ்கோ நிறுவனத்தின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் உலகப் புகழ்பெற்ற பல்வேறு பாரம்பரிய வரலாற்று சிற்பங்களை கண்டு ரசிப்பதற்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

எனினும், மாமல்லபுரம் பகுதியில் இதுவரை நிரந்தரமாக பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தலசயன பெருமாள் கோயிலுக்கு எதிரே காலியாக உள்ள குறுகலான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இக்குறுகிய பேருந்து நிலையத்தில் சுமார் 10 பேருந்துகள் மட்டுமே நிற்க முடியும். எனினும் இங்கு ஒரே நேரத்தில் ஏராளமான பேருந்துகள் நிறுத்த இடமின்றி, மாமல்லபுரம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியபடி வெளியே செல்ல முடியாமல் பலமணி நேரம் திணறி வருகிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த 1992ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதற்காக, மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான ஸ்ரீ கருக்காத்தம்மன் கோயில் எதிரே 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்குள்ள குடியிருப்புகளை அகற்றி, அந்த நிலம் வருவாய்துறை மூலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, மாமல்லபுரம் நகருக்குள் இருந்து பேருந்து நிலையத்தை வெளியே கொண்டுவர திட்டமிட்டு, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஸ்ரீ18 கோடி நிதி ஒதுக்கி, அப்பணிகள் ஒன்றிய பொதுப்பணி துறையிடம் இருந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில், ஆட்சி மாற்றத்தால் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பின்னர், அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கான நிதியை ஸ்ரீ25 கோடியாக உயர்த்தி, ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அங்கு மண் பரிசோதனை நடைபெற்று, அது பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு உகந்த இடம் என சான்றிதழ் பெறப்பட்டது. அதன்பிறகும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருந்தன. இதையடுத்து, தற்போது திமுக அரசு பொறுப்பேற்றதும், கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது, மாமல்லபுரம் புதிய நவீன பேருந்து நிலையத்துக்கு ஸ்ரீ50 கோடி நிதி ஒதுக்கி விரவைில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் புதிய நவீன பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடங்களை நேற்று செங்கல்பட்டு மாவட்ட சார்ஆட்சியர் நாராயண சர்மா பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அங்கு பட்டா நிலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் கால்வாய் கட்டி, அந்த நீரை பக்கிங்காம் கால்வாயில் விடவேண்டும். தலையாரி குட்டையில் இருந்து வெளியேறும் நீரும் இங்கு தேங்கி நிற்கக்கூடாது என்று சார்ஆட்சியர் அறிவுறுத்தினார். அவரிடம், அங்கு புதிய பேருந்து நிலையத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இந்த ஆய்வில் சிஎம்டிஏ அதிகாரிகள், வருவாய், போக்குவரத்துத் துறை, பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post புதிய பேருந்து நிலைய பணியை விரைவில் துவங்க வேண்டும்: மாமல்லபுரம் மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: