சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் ஏரி கடைவாசல் அருகில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

சோளிங்கர் : சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் ஏரி கடைவாசல் அருகில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கரிக்கல் கிராமத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஏரி நிரம்பியது. இந்த ஏரியின் மதகுகள், கரைகள், ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரி கரையில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது.

மேலும், ஏரி நிரம்பி கடைவாசல் வழியாக செல்லும் உபரி நீர் ஓடைக்கால்வாய்க்கு செல்கிறது. கடை வாசலில் இருந்து வெளியேறும் தண்ணீர் கரிக்கல்- கிருஷ்ணாவரம் செல்லும் சாலையை கடந்து ஓடைக்கால்வாய்க்கு செல்லும் நிலையில் ஏரி கடைவாசல் அமைந்துள்ள பகுதியில் உள்ள கரிக்கல் – கிருஷ்ணாவரம் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கடைவாசல் வழியாக வெளியேறும் உபரி நீர் ஓடைக்கால்வாய்க்கு செல்கிறது. இந்த ஓடைக்கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் மூழ்கி பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கடைவாசல் ஒட்டியுள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர்களை வைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரிக்கல் – கிருஷ்ணாவரம் சாலையில் கடைவாசல் அருகே தரைப்பாலம் அமைக்க வேண்டும். அதேபோல் பயிர்கள் மூழ்குவதற்கு காரணமான ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் ஏரி கடைவாசல் அருகில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: