வருகிறது நாடாளுமன்ற தேர்தல் ரவுடிகள் லிஸ்ட் கணக்கெடுப்பு பணிகளை துவக்கிய போலீசார்

திண்டுக்கல், பிப். 5: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாவட்டத்தில் ரவுடிகளின் பட்டியல் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. போலீசார், தேர்தல் பிரிவு வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஸ்டேசன் வாரியாக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்னைக்குறிய கிராமங்கள், நபர்கள் குறித்து ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளதா அல்லது என்ன பிரச்சினைகளுக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பிரச்சினைக்குறிய கிராமங்களில் தேர்தல் அறிவிப்பு காலத்தில் இருந்து கூடுதல் கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் சிறையில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள் கடந்த பல ஆண்டுகளாக எந்த பிரச்னையிலும் ஈடுபடாமல் உள்ளவர்கள், தற்போதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என பல்வேறு பிரிவுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது.

ஒவ்வொருவரின் மீதும் மொத்தம் எத்தனை வழக்குகள் உள்ளன எனவும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. தேர்தலுக்குள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தும் பலர் மீது குண்டர் சட்டம் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சமூக விரோதிகள், ரவுடிகள் லிஸ்டில் உள்ளவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொலை, கொலை முயற்சி, தொடர் வழிப்பறி, ஐந்து வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளவர்கள், தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கணக்கெடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’’ என்றனர்.

The post வருகிறது நாடாளுமன்ற தேர்தல் ரவுடிகள் லிஸ்ட் கணக்கெடுப்பு பணிகளை துவக்கிய போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: