எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம் தொழில்நுட்ப குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அரசு உத்தரவு

சென்னை: எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: எண்ணூரில் கடந்த டிச.26ம் தேதி அமோனியா வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு 7 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைத்தது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல அலுவலக அதிகாரி பூர்ணிமா, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சங்கர் நரசிம்மன், ஒன்றிய தோல் ஆராய்ச்சி நிறுவன மூத்த முதன்மை விஞ்ஞானி சீனிவாசன், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சரவணன், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரக இணை இயக்குநர் கார்த்திகேயன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (சென்னை மண்டலம்) இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் அடங்கிய தொழில்நுட்ப குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உரத்தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக குழாயை சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் இடமாற்றம் கொண்டதால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று குழுவால் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகள் வருமாறு: தொழிற்சாலையில், கடலுக்கு அடியில் தற்போதுள்ள அமோனியா கொண்டு செல்லும் குழாய்களுக்கு பதில் புதிய குழாய்கள் அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்க வேண்டும்.

கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய் சரியாக பாதுகாக்கப்படவில்லை. பொதுமக்கள் அணுகாத வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும். முன்குளிரூட்டுதல் மற்றும் அமோனியா வாயுவை திரவ நிலையில் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கு, குழாயின் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்காக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி அழுத்த சோதனையை இந்நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். குழாய் அமைப்பின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பை தொழிற்சாலை உறுதி செய்த பின்னரே, அமோனியா செலுத்தப்பட வேண்டும்.
கசிவு ஏற்பட்டால் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில் சென்சார்கள் அமைக்கப்பட வேண்டும். ஆபத்துகள் குறித்த அவசர தயார்நிலை அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலை தயாரிக்க வேண்டும். அமோனியா வாயு காற்றில் நேரடியாக வெளியேற்றப்படுவதை தவிர்த்து எரிக்கப்பட வேண்டும். குழாயில் கசிவு ஏற்படும்போது உடனடியாக அதன் செயல்பாட்டை நிறுத்த தானியங்கி கருவிகள் நிறுவப்பட வேண்டும். கிராம மக்களை எச்சரிக்க ஒலி எழுப்பான்கள் அமைக்கப்படவேண்டும். வாயுவை கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் சமயங்களில், காற்றில் அமோனியா வாயு அளவை ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் கண்காணித்து மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் இயக்குநர்-தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்துக்கு தொழிற்சாலை தெரிவிக்க வேண்டும். வாயுவினை கஎடுத்துச் செல்லும் சமயங்களில் கடல்நீரில் அமோனியா அளவை அளவீடு செய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆலையை மறுதொடக்கம் செய்வதற்கு முன், சேமிப்பு கிடங்கு, ரசாயன சேமிப்பு தொட்டிகள் மற்றும் குழாய்களுக்கு பாதுகாப்பு தணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தொழிற்சாலை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அல்லது இதர அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் செயல்பாட்டு ஆய்வை இந்த தொழிற்சாலை மேற்கொண்டு,தேவையான அனைத்து அமைப்புகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வாயுக் கசிவு குறித்து முழுமையான பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். முகக்கவசம், தலைக்கவசம், பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்புக் கண்ணாடிகள், ரசாயனச் பாதுகாப்பு கையுறைகள் மற்றும் உடைகள், சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இதுதவிர, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிபந்தனைகளை செயல்படுத்தாததால் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்று அனைத்துப் பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

 

The post எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம் தொழில்நுட்ப குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: