தமிழகத்தில் முதல்முறையாக மத்திய சென்னையில் தேர்தல் பணி தொடங்கினார் அமைச்சர் உதயநிதி: அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக மத்திய சென்னையில் தேர்தல் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கினார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி திமுக பாகநிலை முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு தலைமை தாங்கினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தார்.

இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பாக நிலை முகவர்களுக்கு தேர்தல் குறிப்பேடு, வாக்காளர் பட்டியல், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40ம் ஜெயிப்பது உறுதி. கூட்டணி பேசுவார்த்தை குழுவினர் கூட்டணி கட்சிகளை சந்தித்து பேசி உரிய தொகுதிகளை ஒதுக்குவார்கள். ஒன்றிய பாஜவை ஏன் விரட்டி அடிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து எடுத்து சொல்ல வேண்டும். ஆளும்கட்சியாக சந்திக்கும் நாடாளுமன்ற தேர்தல் இது. 2024 தேர்தல் முடிவுகள் 2026 தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். எனவே 40 தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற வேண்டும்.

அப்போது தான் தமிழ்நாடு உரிமைகளை கேட்டு பெற முடியும். ஒன்றிய பாஜ அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. திமுக முடிவு செய்பவர் தான் ஒன்றிய பிரதமர் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இபிஎஸ் சிறைக்கு செல்வார் என ஓபிஎஸ் சொல்கிறார். ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் என இபிஎஸ் சொல்கிறார். நான் சொல்கிறேன், ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே கைது ஆகப்போகின்றனர். ஆனால் சிறைக்கு செல்லும் போது தவழ்ந்து தவழ்ந்து செல்லாதீர்கள்.

எம்ஜிஆர் நினைவு நாள் போஸ்டரில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் படத்திற்கு பதில் நடிகர் அரவிந்தசாமி படத்தை போட்டு போஸ்டர் அடிக்கும் நிலையில் தான் இன்றைய அதிமுக உள்ளது. 2021 தேர்தலில் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பியது போல 2024 தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளை வீட்டிற்கு அனுப்புவதே நம் குறிக்கோள். தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படவில்லையென்றால் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் விட்டுவிடுவீர்களா மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி சிரித்த முகம் கொண்டவருக்கு தான்.

இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி என்பது திமுகவுக்கு பெரிதல்ல. கொள்கைதான் பெரிது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பதால், அசுரர்களை அழிக்க முருகன் புறப்பட்ட போது அசுரனை அழிக்கும் பணியை வீரபாகு என்கிற தளபதியிடம் ஒப்படைத்தார். அதேபோல், பாஜ என்கிற அசுர கூட்டத்தையும், அடிமை சாசனத்தை எழுதி வைத்திருகிற எடப்பாடி கூட்டத்தையும் அழிக்க வந்திருக்கும் முதலமைச்சரின் தளபதி வீரபாகுவாக உதயநிதி இருக்கிறார் என்றார்.

தயாநிதி மாறன் எம்பி பேசுகையில், இந்த முறை தேர்தலை சந்திக்கும் போது மும்முனை போட்டியாக இருக்கும். பாஜகவின் பி டீமாக அதிமுக உள்ளது. தொடர்ந்து நாம் வெற்றிகளை பெற்று வருகிறோம். வெற்றி பெறுவதால் தலைக்கனம் இருக்க கூடாது. நம்மை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும், சிறிய தவறுகள் செய்தால் கூட அதனை பெரிதாக்க வேண்டும் என ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பை அளித்துவிடக்கூடாது என்றார். எம்எல்ஏக்கள் ஐ.பரந்தாமன், வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், மேயர் பிரியா ராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post தமிழகத்தில் முதல்முறையாக மத்திய சென்னையில் தேர்தல் பணி தொடங்கினார் அமைச்சர் உதயநிதி: அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: