கேளம்பாக்கத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் பகுதியில் இருந்து தாம்பரம், கோயம்பேடு, தி.நகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகள் காவல் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இந்த இடத்தில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக அவற்றிற்கு செல்வோரின் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.

சாலையோரம் போதிய இடம் இல்லாததால் நிழற்குடை அமைக்கப்படவில்லை. மிகவும் குறுகலான இந்த இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சாலையிலேயே நின்றபடி பேருந்தில் ஏற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் வெளிப்பகுதியில் பொதுமக்கள் நிற்பதால் அந்த நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில், புதிய பேருந்து நிழற்குடை அமைக்க தீர்மானம் நிறைவேற்றியும், போதிய இடம் இல்லாததால் அமைக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் கோடைக்காலம் துவங்க உள்ளநிலையில் பள்ளிக்குழந்தைகள், பெண்கள் பேருந்து நிழற்குடை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. ஆகவே, புதிய இடத்தை தேர்வு செய்து பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post கேளம்பாக்கத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: