சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.35 கோடி ஒதுக்கீடு: புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கு முக்கியத்துவம்

* சிறப்பு செய்தி
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3,013 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 139 பள்ளிகள் மட்டுமே சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இப்பள்ளிகள் அனைத்தையும் சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘சிட்டிஸ் திட்டத்தின்கீழ் நவீனமயமாக்கப்பட்ட 17 பள்ளிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 4 பள்ளிகளில் 97% பணிகள் முடிந்து கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளது. தற்போது 2ம் கட்டமாக சிட்டிஸ் திட்டத்தின் கீழ் அம்பத்தூர், சைதாப்பேட்டை, புலியூர், கோடம்பாக்கம், மடுவின்கரை போன்ற இடங்களில் உள்ள 6 பள்ளிகள் நவீனமயாக்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர் விடப்படவுள்ளது. இந்த 6 பள்ளிகளை சீரமைக்க ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து மேலும் 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் சீரமைக்கப்பட உள்ளது.

* வகுப்பறைகள், கழிப்பறைகள், சமையல் மற்றும் உணவு விடுதிகள், விளையாட்டுப் பகுதி போன்றவற்றை சீரமைத்தல்/ புதுப்பித்தல்.
* புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை கட்டுதல்.
* தலைமையாசிரியர் அறைகள் மற்றும் பணியாளர் அறைகளின் புதிய தோற்றம் மற்றும் முகப்பை உயர்த்துதல்
* குழந்தை-உளவியலைக் கருத்தில் கொண்டு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்றல் மற்றும் பொது உணர்வைத் தூண்டுதல்.
* மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கூடுதல் பாடத்திட்ட உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்காக மொத்தம் ரூ.35 கோடி ஒதுக்கப்படவுள்ளது’’ என்று தெரிவித்தார்.

* கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை
சென்னை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளித்து அதிக நிதி ஒதுக்கி வருகிறார். இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கென அதிக நிதி ஒதுக்குவார் என எதிர்பார்க்கலாம். சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட பின் 139 பள்ளிகள் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் புறநகர் பகுதியாக இருப்பதால் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் உள்ளது. பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைப்பது, சிசிடிவி அமைப்பது போன்ற பணிகள் உள்ளது. இவைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் நிதி ஒதுக்க கோரியுள்ளோம். அமைச்சரும் முக்கியத்துவம் அளித்து ஒதுக்குவதாக சொல்லியிருக்கிறார். அடுத்த வாரத்தில் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதில் பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சுற்றுலா, ஆசிரியர்களுக்கு சுற்றுலா, மாணவர்களுக்கென பிரத்யேக அட்டை போன்றவைகள் மேயரின் அறிவிப்பில் வெளியாகும்’’ என்று தெரிவித்தார்.

The post சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.35 கோடி ஒதுக்கீடு: புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கு முக்கியத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: