ஆதாரமற்ற குற்றச்சாட்டிலிருந்து நீதிபதிகளை பாதுகாப்பது அவசியம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு முன்பாக வக்கீல் குல்ஷன் பஜ்வா, மற்றொரு வக்கீலை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வக்கீல் பஜ்வாவுக்கு நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை. மாறாக, நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பஜ்வா மனு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக பஜ்வாவுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து வக்கீல் பஜ்வா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், பமிடிகன்டம் நரசிம்மா, ‘‘மனுதாரர் மன்னிப்பு கோரியதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியது சரியானது என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் அது நேர்மையற்ற மன்னிப்பு. தாமதமாக, வெறும் உதட்டளவில் கேட்ட மன்னிப்பை ஏற்க முடியாது. தவறுக்கு உண்மையில் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தண்டியிலிருந்து தப்பிக்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. மேலும், நீதிபதிகளின் கண்ணியம், நற்பெயரை காப்பதும், அவர்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பதும் அவசியம். எனினும் மனுதாரரின் வயது, உடல் நிலையை கருத்தில் கொண்டு, 3 மாத சிறைக்கு பதிலாக சில நிமிட சிறை தண்டனையாக குறைக்கிறோம்’’ என தீர்ப்பளித்தனர்.

The post ஆதாரமற்ற குற்றச்சாட்டிலிருந்து நீதிபதிகளை பாதுகாப்பது அவசியம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: