ஈரோட்டில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜன.31:ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், பட்டதாரி ஆசியர் கழகத்தின் மாநில பொதுசெயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு அலுவலர் ஒன்றிய ரவிச்சந்திரன், அரசு ஊழியர்கள் சங்க வெங்கிடு, முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக இந்திரக்குமார், ஊர்தி ஓட்டுநர்கள் சங்க சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக அரசு அலுவலா் ஒன்றிய மாநில துணை தலைவர் ஆலீஸ் ஷீலா, தேசிய ஆசிரியர் சங்க மாநில பொதுசெயலாளர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.

அனைத்து துறைகளிலும் சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள், பகுதி நேர பணியாளர்கள் அனைவரின் வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். தனியார் மயத்தினை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: