மதுரை எய்ம்ஸ்சும்…தேர்தல் டிராமாவும்…: சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

* 2015ல் பட்ஜெட்டில் அறிவிச்சாங்க 2019ல் மோடி அடிக்கல் நாட்டினாரு 2024ல் கட்டுமான பணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிச்சு இருக்காங்க

சிறப்பு செய்தி

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக நடத்தப்படும் ‘தேர்தல் டிராமா’ என அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அமைக்கப்படும் என கடந்த 2015 பிப்ரவரியில் பாஜ அரசின் பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதையடுத்து, தமிழ்நாட்டின் 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, 221 ஏக்கரில், ரூ.1,265 கோடி நிதியில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018 ஜூனில் முடிவானது. இந்த அறிவிப்பு இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் மோடி, 2019, ஜன.27ல் அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வருமென அறிவித்த நிலையில், தற்போது 5 ஆண்டுகள் கடந்துள்ளது. அறிவிப்பு வெளியான 2015ல் இருந்து தற்போது 9 ஆண்டுகளாகி விட்டது. சுற்றுச்சுவர் கட்டும் பணி கூட முழுமையாக நிறைவடையவில்லை.

கட்டுமானத்திற்கு செங்கல் வைத்ததோடு சரி. கட்டுமானத்தை விரைந்து முடிக்க ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டு, நீண்ட இழுபறிக்கு பின் ஜப்பான் ஜிகா நிறுவன கடன் ஒப்பந்தம் 2021 மார்ச்சில் செய்யப்பட்டும், கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை. ஜூன் 2021ல் நடந்த மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு முதல் கூட்டத்தில் ரூ.1,264 கோடியில் தொடங்கிய திட்ட மதிப்பீடு, ரூ.1,978 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போதைய சூழலில் இதுவரை கட்டுமான பணிகளே துவங்காத நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காகவே பாஜ இந்த எய்ம்ஸ் திட்டத்தை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணியை தொடங்காத ஒன்றிய அரசு, இம்மருத்துவமனை கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி, மதுரையில் வகுப்பறை வசதியின்றி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் இங்கு மாணவர்கள் படித்து வரும் நிலையில், இவ்வகுப்புகள் மதுரையில் ஒரு வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்படுவதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கானல் நீராக எய்ம்ஸ் திட்டம் இருந்து வருகிறது. சமீபத்தில் எய்ம்ஸ்சுக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மதுரை எம்பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், எய்ம்ஸ் எங்கே? 2வது செங்கல்லை எடுக்க வைக்க அமைச்சர்கள் யாரையும் அனுப்பாத ஒன்றிய அரசை கண்டிக்கிறேன்’ என்று கிண்டலாக பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் எய்ம்ஸ் அறிவித்து 9 ஆண்டுகள், அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எய்ம்ஸ் நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்துள்ளது. 221 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக்கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் போன்றவை அமைய இருப்பதால், கட்டுமானப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டே இத்திட்டத்திற்கான அறிவிப்புகளை வேகப்படுத்தியுள்ளனர். இது வழக்கமான தேர்தல் டிராமா போல அல்லாமல், பெற வேண்டிய அனுமதிகளை விரைந்து பெற்று, கட்டுமானத்தை துவக்கி விரைந்து முடிப்பதையும் ஒன்றிய அரசு வேகப்படுத்துவது அவசியம். இதை செய்யாமல் தேர்தல் வரைக்கும் ஏதோ பணிகளை செய்கிறோம் என்று காட்டிவிட்டு மீண்டும் கிடப்பில் போட்டுவிட கூடாது. ஏற்கனவே, கால தாமதத்தால் ரூ.724 கோடி மதிப்பீடு உயர்ந்து இருக்கிறது. இன்னும் தாமதப்படுத்தினால் மேலும் மதிப்பீடு உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் கடன் ஒப்பந்தம் போட வேண்டிய சூழல் ஏற்படும். மதுரை எய்ம்ஸ்சுடன் அறிவிக்கப்பட்ட மற்ற மருத்துவமனைகளும், அதன்பிறகும் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளும் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில எய்மஸ் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே, மக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட இந்த எய்ம்ஸை விரைந்து கட்டுமான பணிகளை தொடங்கி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்’’ என்றனர்.

* எய்ம்ஸ் வரலாறு

மதுரை எய்ம்ஸ் அறிவித்து 9 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில் சுற்றுச்சுவர் கூடி முழுமையாக முடியாமல் இருக்கும் கட்டிட வரலாற்றை பார்ப்போம்… 2015 – பட்ஜெட்டில் எய்ம்ஸ்

அறிவிப்பு

* 2018 – மதுரை தோப்பூரில் இடம் தேர்வு

* 2019 – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

* 2021 – ஜப்பான் நிறுவத்துடன் கடன் ஒப்பந்தம் திட்ட மதிப்பீடு ரூ.1978 கோடியாக உயர்வு

* 2022 – ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மதுரை எய்ம்ஸ்சுக்கான தற்காலிக வகுப்பு

* 2024 – ராமநாதரபுத்தில் இருந்து எய்மஸ் மாணவர்கள் மதுரை தற்காலிக கட்டத்திற்கு மாற்றம்

* 2024 – சுற்றுச்சூழல் அனுமதிக்கோரி விண்ணப்பம்

The post மதுரை எய்ம்ஸ்சும்…தேர்தல் டிராமாவும்…: சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: