நாடு முழுவதும் 30 நகரங்களில் பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு: ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 30 நகரங்களில் பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பிச்சை எடுக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வடக்கே அயோத்தி முதல் கிழக்கே கவுகாத்தி வரை, மேற்கில் திரிம்பகேஷ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரை மொத்தம் 30 நகரங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் பிச்சையில்லாத நகரங்களாக உருவாக்க ஒன்றிய அரசு திட்டம் வகுத்துள்ளது. மேற்கண்ட 30 நகரங்களில் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருப்போரை அடையாளம் கண்டு விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படும். மத, வரலாற்று அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரங்களாக மாற்றிய பின்னர், மேலும் பல நகரங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் வரும் பிப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்படும். தேசிய அளவிலான போர்டல் மற்றும் மொபைல் செயலியில் பதிவுகள் ஏற்றப்படும். இத்திட்டத்தின் நோக்கம், பிச்சைக்காரர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை அளித்து அவர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தன.

The post நாடு முழுவதும் 30 நகரங்களில் பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு: ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: