தியாகராஜரின் 177வது ஆராதனை விழா திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை கோலாகலம்: ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பாடி இசையஞ்சலி

தஞ்சை: தியாகராஜரின் ஆராதனை விழாவை முன்னிட்டு திருவையாறில் இன்று பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜர் சுவாமிகள். இவர் தியாக பிரம்மம் என அழைக்கப்படுகிறார். இவரது சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா நடைபெறும்.

இந்த ஆண்டு தியாகபிரம்ம மகோத்சவ சபா சார்பில் 177வது ஆராதனை விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பிரபல இசைக்கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். 4ம் நாளான நேற்று திரைப்பட பின்னணி பாடகி மகதி, சுதாரகுநாதன், காய்திரி கிரிஷ், திருவனந்தபுரம் கிருஷ்ணகுமார், பின்னிகிருஷ்ணகுமார், சின்மயா சகோதரிகள் உமா, ராதிகா ஆகியோர் பாடல்கள் பாடி இசை அஞ்சலி செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இன்று(30ம் தேதி) நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் அங்கிருந்து தியாகராஜர் சிலையுடன் உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் புறப்பட்டது. ஐயாறப்பர் கோயில், அம்மன் வீதி, தெற்கு வீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஆராதனை பந்தலை வந்தடைந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடைபெற்றது. பின்னர் தியாகராஜர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு பால், மஞ்சள், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கியது. பிரபல பாடகர்கள் சுதா ரகுநாதன், மகதி, ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை முடிவடைந்தது.

கலெக்டர் தீபக் ஜேக்கப், தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன், செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 7.20 மணிக்கு சிக்கல் குருசரன் பாடுகிறார். இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில் தியாகராஜர் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இரவு 8.20 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். 8.40க்கு பிரபஞ்சம் பாலச்சந்திரன் புல்லாங்குழல் வாசிக்கிறார். 9.20க்கு கடலூர் ஜனனி பாடுகிறார். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

The post தியாகராஜரின் 177வது ஆராதனை விழா திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை கோலாகலம்: ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பாடி இசையஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: