கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய இடம் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

 

சென்னை, ஜன.30: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் அண்ணா தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் அண்ணாதுரை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனி பிரிவில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்பேட்டில் ஆம்னி பஸ் இயக்கப்பட்டு வந்த இடமான சென்னை ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையத்தில் எங்களுக்கு தமிழக அரசால் தனியாக இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. அங்கு நாங்கள் தங்கி இருந்து சுமை தூக்கும் பணியாற்றி வந்தோம். எங்கள் சங்க உறுப்பினர்களை நம்பி சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். நாங்கள் சுமார் 47 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

மேலும், எங்களில் சிலர் பதிவு முகவர்களாகவும், டிக்கெட் பதிவு செய்து தரும் நபர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, கோயம்பேட்டில் இயங்கி வந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நாங்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய இடம் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: