வெளிநாட்டில் வேலை என கூறி புதுவையில் 5 பேரிடம் ரூ.6 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, ஜன. 29: புதுவையில் ஆன்லைன் முதலீடு, வெளி நாட்டில் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி 5 பேரிடம் ரூ.6 லட்சம் மோடிச செய்யப்பட்டுள்ளது. தொண்டமாநத்தத்தை சேர்ந்த ராஜகுமார் என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து மோசடியாக 10,200 எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு வங்கி அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். அப்போது, ஏடிஎம் கார்டை புதுப்பிப்பதாக ஓடிபி எண்ணை கேட்டுள்ளார். அவரும் ஓடிபி எண்ணை பகிர்ந்த சில நிமிடங்களிலேயே ரூ.37,175 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.

தனலட்சுமி என்ற பெண் வெளிநாட்டில் வேலை தேடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டில் வேலை இருப்பதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. இந்த வேலையில் சேர ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என தெரியாத நபர் சிலர் தனலட்சுமியை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவரும் ரூ.3 லட்சத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். ஜெயந்தி என்ற பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.9,500 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கூறியதால் லாஸ்பேட்டையை சேர்ந்த ரவி சங்கர் என்பவர் ரூ.1.49 லட்சத்தை இழந்துள்ளார்.

காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த நூருல் ஹயுக் என்பவர் பேஸ்புக்கில் குறைந்த விலையில் கார் விற்பனை தொடர்பான ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் இருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவரிடம் பேசிய நபர் தான் ஒரு சிஐஎஸ்எப் காவலர் என்றும், தற்போது பெங்களூரில் பணிபுரிந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், பயணக்காப்பீடு தொகை ரூ.10,250 மற்றும் கார் போக்குவரத்து கட்டணங்கள் உட்பட மொத்தம் ரூ.93,120 செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். நம்பிக்கையின் பேரில் அவர் பணம் அனுப்பி ஏமாந்துள்ளார். மொத்தமாக 5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலை நம்பி ரூ.5.99 லட்சத்தை இழந்துள்ளனர்.

இதுதவிர, புதுச்சேரியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் சகோதரிக்கு தெரியாத செல்போன் எண்ணில் இருந்து தவறான அழைப்புகள் வந்துள்ளது. சங்கர் என்பவர் லோன் ஆப் மூலம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை வட்டியோடு செலுத்தி பிறகு தெரியாத நபர் சங்கரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதுடன் மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இளங்கோ என்பவருக்கு தெரியாத நபர் ஒருவர் போன் செய்து மும்பை சைபர் கிரைம் அதிகாரி என கூறி மோசடி செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெளிநாட்டில் வேலை என கூறி புதுவையில் 5 பேரிடம் ரூ.6 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: