அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4% அதிகரிப்பு

விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு, தீக்காயம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் உடல் மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்பு தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இன்மை காரணமாக, நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான உடல்காயங்களும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

ஆனால், இது போன்றவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணம். தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகத்திற்கு 6,322பேர், கல்லீரலுக்கு 438பேர், இதயத்திற்கு 76பேர், நுரையீரலுக்கு 64பேர், இதயம் மற்றும் நுரையீரலுக்கு 25பேர், கைகளுக்கு 27 பேர், சிறுகுடலுக்கு 2பேர், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு 40பேர் காத்திருக்கின்றனர். இதேபோல் சிறுநீரகம் மற்றும் கணையத்திற்கு 42 பேர், சிறுகுடல் மற்றும் வயிற்றுக்கு ஒருவர் என்று மொத்தம் 7,037 பேர் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு (2023), செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடையும் நபர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது. தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது: உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இறுதிச்சடங்கின் போது அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், சமீப காலமாக உடல் உறுப்புதானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. மூளைச்சாவு அடைந்த பலரது உடல்உறுப்புகள் ஏராளமானோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டில் இது 11.4சதவீதம் அதிகரித்துள்ளது. அறிவிப்பு வெளியானது முதல், இதுவரை தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் இந்த மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 20க்கும் மேற்பட்டோரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அதே போல், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல்உறுப்பு தானம் செய்வதற்கு பெயர் பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு 178 பேர் தானம் அளித்ததால் 1000 பேர் பயனடைந்துள்ளனர். எனவே, உடல் உறுப்பு தானம் அளிக்க பொதுமக்கள் அதிகளவில் முன்வர வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

* தானம் கிடைக்காமல் 90% பேர் உயிரிழப்பு
இந்தியாவை பொறுத்தவரை உறுப்புகளை தானமாக பெறுவதற்கு பெயர் பதிவு செய்து விட்டு, 5லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இதில் சிறுநீரகத்திற்காக மட்டும், ஆண்டுக்கு 2லட்சம் பேர் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆனால் 8ஆயிரம் பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. 50ஆயிரம் பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில், 1700 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு 15ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில், 250பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. இப்படி உறுப்பு தானத்திற்கு காத்திருப்பவர்களில் 90சதவீதம் பேர், அந்த உறுப்புகள் கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர் என்பதும் மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

* இணையதளத்தில் பதிவு செய்யலாம்
உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், முதலில் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ, அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் மட்டுமே, உடல்உறுப்புகள் தானமாக பெறப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

The post அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: