பல்லாவரம் வள்ளுவர்பேட்டையில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் வள்ளுவர்பேட்டை பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி, 13வது வார்டு பகுதியான பல்லாவரம் வள்ளுவர்பேட்டை 1 மற்றும் 2வது தெரு, மறைமலை அடிகள் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால், கழிவுநீர் வெளியேறி தெருக்களில் வழிந்து ஓடுகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் வயோதிகர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி ஆகியவற்ற முறையாக செலுத்தி வருகிறோம். அப்படி இருந்தும் எங்களது பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது.

இவ்வாறு, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் பிறப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால், மர்ம காய்ச்சல் பரவுவதால் அச்சத்தில் உள்ளோம். எனவே பொதுமக்களின் நலன் கருதி, எங்களது தெருக்களில் சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீரை சுத்தப்படுத்தி, பாதாள சாக்கடையில் சேர்ந்துள்ள குப்பை கழிவுகளை முறையாக அகற்றி, இனிவரும் காலங்களில் கழிவுநீர் தெருக்களில் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post பல்லாவரம் வள்ளுவர்பேட்டையில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: