பழநி திருஆவினன்குடி கோயிலில் காலணி பாதுகாப்பு மையம் அமைக்க கோரிக்கை

 

பழநி, ஜன. 28: பழநி திருஆவினன்குடி கோயிலில் காலணிகள் மாயமாவதை தடுக்க காலணி பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலுக்கு செல்வது வழக்கம். தவிர, உள்ளூர் பக்தர்களும் இக்கோயிலுக்கு அதிகளவு செல்கின்றனர்.

கோயிலின் உள்ளே குருபகவான், அம்மன், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளதால் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி என வாரத்தின் அநேக நாட்களிலும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காலணிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக தெற்கு பகுதியில் காலணி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இம்மையம் பஞ்சாமிர்த விற்பனை மையமாக மாறி உள்ளது.

இதனால் பக்தர்கள் தங்களது வாகனங்களுக்கு அடியிலும், கோயில் வாசல்களிலும் செருப்புகளை கழட்டி விட்டுச் செல்கின்றனர். இதில் பலரது செருப்புகள் அடிக்கடி மாயமாகி விடுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எனவே, கோயில் நிர்வாகம் திருஆவினன்குடி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் இக்கோயில் பகுதியில் காலணி பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி திருஆவினன்குடி கோயிலில் காலணி பாதுகாப்பு மையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: