12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

 

ஈரோடு, ஜன. 28: ஈரோட்டில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்(டிட்டோ-ஜாக்) நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் சரவணன், கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினர். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் டிட்டோ ஜாக்கின் உயர்மட்ட குழு உறுப்பினர் முத்துராமசாமி பங்கேற்று போராட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் வாய் மொழியாக ஏற்றுக்கொண்ட, இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-1-2006ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட மூவர் குழுவிற்கு பரிந்துரை செய்து தீர்வு காண வேண்டும்.

எமிஸ் பதிவேற்ற பணியில் மாணவர்கள் வருகை பதிவு தவிர, பிற அனைத்து வகையான பதிவேற்ற பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பான எழுத்து பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆசிரியர் கூட்டணின் மாநில மகளிரணி செயலாளர் ரமாராணி, ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் மதியழகன், வேலுச்சாமி, சண்முகம், தங்கராஜ், வீரக்குமார் மற்றும் மாவட்டத்தில் தொடக்க பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

The post 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: