காலியிடங்கள், பணிமாறுதல், புதிய நியமனங்கள் அனைத்துக்கும் காலக்கெடு: கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்.! பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார்

சென்னை: காலிபணியிடங்கள், பணிமாறுதல், புதிய நியமனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் புதிய அரசாணை பிறப்பித்துள்ளார். எல்லாம் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்பதற்காக அவரது இந்த நடவடிக்கை கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கல்வித்துறைக்கு புதிய உத்வேகம் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அதற்காக அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நியமித்தார். அதன்பிறகு இளம் அதிகாரிகளையும் நியமித்தார். கல்வித்துறையின் வளர்ச்சி குறித்து அடிக்கடி விசாரித்தும், ஆலோசனை நடத்தியும் வந்தார். கடந்த ஆட்சியில் கல்வித்துறை புரோக்கர்களின் மயமாகி வந்தது. பணம் கொடுத்தால்தான் பணி மாறுதல் என்ற நிலை இருந்தது. தற்போது பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகிறது. காலிபணியிடங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. பணி மாறுதல்களும் கலந்தாய்வு அடிப்படையில் நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் கல்வித்துறையில் மேலும் புதிய யுக்தியை புகட்ட நினைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரனை நியமித்தார். அவர் நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரத்தில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தனது நடவடிக்கைகளை மாற்றி அமைத்தார். அவரது அறைக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குறைகளை கூறலாம் என்று அறிவித்தார். இதனால் தினமும் ஏராளமான ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியும், உதவிகளை பெற்றும் வருகின்றனர். இதனால் தற்போது கல்வித்துறையில் பெரும்பாலான குறைபாடுகள் களையப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மேலும் வெளிப்படைத் தன்மையை உருவாக்க கல்வித்துறையில் அதிரடி மாற்றத்துக்கான அரசாணையை குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வகுத்து அறிவுறுத்தல் வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களில் இருந்து நேரடி பணி நியமனம் செய்யும்போது, பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணை ஒன்றினைக் கீழ்க்கண்டவாறு வெளியிட்டு அரசு ஆணையிடுகிறது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து வருகிற மே 1ம் தேதிக்குள் கணக்கீடு செய்ய வேண்டும். மேற்படி கண்டறியப்பட்ட உபரி பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவலை மே 31ம் தேதிக்குள் செய்ய வேண்டும், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட மதிப்பீட்டை ஜூலை 1ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு ஜூலை 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அரசுக்கு சமர்பிக்கப்படும் கருத்துருக்கள் மீது அரசாணை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும், இதன்படி வெளியிடப்படும் அரசாரணையில் குறிப்பிடும் நேரடி பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் அதன் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்த பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் 2024ஜூன் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்படி நடத்தப்படும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களின் இறுதி பட்டியல் வழங்கப்பட வேண்டிய நாள் மே 1ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த அரசாணையினை பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தலைவர், தேர்வு வாரியம் ஆகியோர் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்து இதுபோன்ற அரசாணை இதுவரை வெளியிடப்பட்டது இல்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், பட்டதாரிகள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post காலியிடங்கள், பணிமாறுதல், புதிய நியமனங்கள் அனைத்துக்கும் காலக்கெடு: கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்.! பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார் appeared first on Dinakaran.

Related Stories: