தடகளத்தில் சாதித்த தமிழ்நாடு: விளையாடு இந்தியா போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட 4 நகரங்களில் 6வது ‘விளையாடு(கேலோ) இந்தியா’ இளையோர் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. அதில் சென்னையில் நடந்த தடகள பிரிவு போட்டிகள் நேற்றுடன் முடிந்தன. அவற்றில் தமிழ்நாடு 11 தங்கம், 6வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. அதிலும் தமிழ்நாட்டின் வீரர் சரண்(பரமகுடி), வீராங்கனைகள் அன்சிலின்(கன்னியாகுமரி), அபிநயா ராஜராஜன்(கல்லூத்து, தென் காசி) ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் 1000மீ தொடர் ஓட்டத்தில் சரணுடன் இணைந்து , நித்திய பிரகாஷ், கோகுல் பாண்டியன், ஆண்டன் சஞ்சய் ஆகியோர் தங்கம் வெல்ல காரணமாக இருந்தனர். அன்சிலின் சகோதரியான அக்சிலினும் ஒரு தங்கம், ஒரு வெள்ளியை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி 1000மீ தொடர் ஓட்டத்தில் இரட்டையர்களான அக்சிலின், அன்சிலின் ஆகியோருடன் அபிநயா ராஜராஜன், தேசிகா ஆகியோரும் இணைந்து சாதித்தனர்.

ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழ் நாடு வீரர்கள் ரவி பிரகாஷ் தங்கமும், யுவராஜ் வெள்ளியும் அள்ளினர். அதேபோல் பெண்களுக்கான மும்முறை தாண்டுதலிலும் தமிழ்நாடு வீராங்கனைகள் பவீனா ராஜேஷ் தங்கமும், பமீலா வர்ஷினி வெள்ளியையும் வசப்படுத்தினர். இப்படி ஒரே ஆட்டத்தில் தமிழ்நாடு தங்கம் வெள்ளி வென்ற பிரிவாக பெண்கள் உயரம் தாண்டுதல் போட்டியும் அமைந்தது. அதில் ஆலிஸ் தேவபிரசன்னா தங்கமும், பிருந்தா வெள்ளியும் கைப்பற்றினர். ஆண்களுக்கான 200மீ ஓட்டத்தில் கோகுல் கண்ணன் தங்கம் வென்றார்.

The post தடகளத்தில் சாதித்த தமிழ்நாடு: விளையாடு இந்தியா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: