ஜனாதிபதி விருதுக்கு நாமக்கல் எஸ்ஐ தேர்வு

 

நாமக்கல், ஜன.26: நாமக்கல் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தனிச்சிறப்புடன் பணியாற்றி வரும் 24 காவல்துறை அலுவலர்கள் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நாமக்கல் மாவட்ட காவல்துறையில், தனிப்பிரிவில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐ அருள்முருகனும் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையில் இவரது 30 ஆண்டுகால சிறப்பான பணியை பாராட்டி காவல்துறை தலைமை இயக்குனர் ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்துள்ளார். அருள்முருகனின் சொந்த ஊர் நாமக்கல். இவர் கடந்த 1993ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில், காவலராக பணியில் சேர்ந்தார். திருச்சி போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று, பின்னர் சென்னை ஆவடியில் உள்ள பட்டாலியன் பிரிவில் பணியாற்றினார்.

பின்னர் டெல்லி திகார் சிறைச்சாலையில் 2 ஆண்டுகள் பாதுகாப்பு பணியில் இருந்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்த காலங்களில் அருள்முருகன், நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு புலனாய்வுத்துறை, வணிக குற்ற புலனாய்வுப்பிரிவு, மாவட்ட எஸ்பி அலுவலக தனிப்பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 4 ஆண்டுக்கு மேலாக நாமக்கல் காவல்நிலைய தனிப்பிரிவு எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்எஸ்ஐ அருள்முருகனுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஜனாதிபதி விருதுக்கு நாமக்கல் எஸ்ஐ தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: