ஒரு சார்பு தீர்ப்பை காரணம் காட்டி பத்திரப்பதிவு ெசய்யாமலிருப்பது சட்ட விரோதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஒரு சார்பு தீர்ப்பு ரத்து செய்யப்படாமல் இருந்தால் அந்த சொத்தை ஒரு சார்பு தீர்ப்பு என்று காரணம் கூறி பதிவு செய்யாமல் இருக்க கூடாது என்று பத்திரப்பதிவு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.வசந்தகுமாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஊட்டி மேற்கு பரி சாலையில் எனது கணவரின் தாத்தா நல்லுசாமி நாயுடுக்கு சொந்தமான 5 ெசன்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது கணவர் பிரசாத் பெயருக்கு நல்லுசாமி நாயுடு உயில் எழுதிவைத்தார். அந்த உயில் நீதிமனறத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எனது கணவர் பிரசாத் 1993ல் மரணமடைந்தார். நானும் எனது மகளும்தான் அவரது சட்டபூர்வ வாரிசுகள். இந்நிலையில் எனது மாமா பாண்டுரங்கன் இந்த உயில் விவகாரத்தை மறைத்து டி.ஜி.பிரிகெட் என்பவருக்கு விற்பனை செய்துவிட்டார். இதை எதிர்த்து ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அது ஒரு சார்பானது (எக்ஸ்பார்ட்டே) என்று கூறி நிலத்தை வாங்கியவர் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நிலத்தை பதிவு செய்வதற்காக ஊட்டி இணை சார் பதிவாளர்-1னிடம் விண்ணப்பித்தபோது அவர் இது ஒரு சார்பாக (எக்ஸ்பார்ட்டே) வழங்கப்பட்ட தீர்ப்பு அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று எனது விண்ணப்பதை நிராகரித்தார். எனவே, இணை சார் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்து எனது நிலத்தை பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சி.மணிபாரதி ஆஜரானார். சார் பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எக்ஸ்பார்ட்டி உத்தரவின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப்பதிவு துறை ஐஜி 2023ல் சுற்றறிக்கை விட்டுள்ளார். அதனால்தான் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எந்த சுற்றறிக்கையாலும் சட்டம் மற்றும் விதிகளை மீற முடியாது. சுற்றறிக்கை என்பது துறைக்குள் பகிரப்படும் தகவல்தான். இது போன்ற பல வழக்குகள் வந்துள்ளன. ஒரு சார்பு தீர்ப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யாமல் இருப்பது சட்டத்திற்கு முரணானது. மனுதாரரை பொறுத்தவரை ஒரு சார்பு தீர்ப்பு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தைத்தான் நாட முடியும். ஒரு சார்பு தீர்ப்பு என்பதை சோதனை செய்யும் அதிகாரம் பதிவாளருக்கு இல்லை. ஒரு சார்பு மற்ற நீதிமன்றத்தில் ரத்து செய்யப்படாமலோ, மாற்றப்படாமலோ இருந்தால் அந்த சொத்தை பதிவு செய்வது பதிவாளரின் கடமையாகும். எனவே, மனுதாரரின் நிலத்தை பதிவு செய்ய மறுத்த ஊட்டி இணை சார் பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் நிலத்தை ஊட்டி இணை சார் பதிவாளர்-1 பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

The post ஒரு சார்பு தீர்ப்பை காரணம் காட்டி பத்திரப்பதிவு ெசய்யாமலிருப்பது சட்ட விரோதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: