நாளை 75வது குடியரசு தின விழா கொண்டாட்டம்: நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.! டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடெல்லி: நாளை 75வது குடியரசு தின விழா கொண்டாட இருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து ெகாள்கிறார். இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றுகிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். விழாவின்போது பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அந்தவகையில், நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா அதிபர் ஜோ பிடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்வில்லை. இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்பதற்காக அவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூர் வருகிறார். அங்கிருந்து இரவு டெல்லி வந்து தங்கும் மேக்ரான், நாளை குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். இதன் மூலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும், பிரான்சைச் சேர்ந்த 6வது அதிபர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார். இந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவக்குழுவும் பங்கேற்க உள்ளது. டெல்லி குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற உள்ளது. கடமை பாதையில் இந்த அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும். விழா ஏற்பாடுகளை கடந்த 2 மாதங்களாக முழுவீச்சில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த முறை அலங்கார ஊர்தியில் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. கலை நயத்துடன் தயாராகி உள்ள தமிழக அரசின் இந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கம்பீரமாக இடம் பெற உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் இந்தாண்டு பங்கேற்கவில்லை. குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

துப்பறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் செங்கோட்டை முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் 25 துறைகளின் அலங்கார வாகன அணிவகுப்புகள் நடக்கிறது. இதுதவிர பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் முப்படைகளின் அணிவகுப்பும் நடக்கிறது. குடியரசு தின விழா நிகழ்ச்சி நடக்கும் மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் சென்னையில் எந்த இடங்களிலும் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், முக்கிய இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post நாளை 75வது குடியரசு தின விழா கொண்டாட்டம்: நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.! டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: