தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் தெப்ப திருவிழா

குன்றத்துார்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்ப திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பிரசித்திபெற்ற கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புகழ்பெற்ற மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் நேற்று தொடங்கி நாளை வரை 3 நாட்கள் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. அந்த வகையில், முதல்நாள் தெப்ப திருவிழா நேற்று மாலை 6.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, தெப்பம் பல வர்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கோ பூஜையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இதனையடுத்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் வெள்ளீஸ்வரும், காமாட்சியம்மனும் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெற்றது. பின்னர், இரவு 8.30 மணிக்கு காமாட்சியம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இத்தெப்ப திருவிழா நிகழ்ச்சியின் 2ம் நாளான இன்று வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியர், காமாட்சியம்மனுடன் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், நாளை 3ம் நாள் தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் வைகுண்டபெருமாள் மற்றும் காமாட்சியம்மன் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில் செயல் அலுவலர் கவெனிதா, பரம்பரை தர்மகர்த்தா சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.

The post தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் தெப்ப திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: