ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுவையில் 22ம் தேதி பொது விடுமுறை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, ஜன. 20: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுவையில் 22ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் நாடு முழுவதும் இருந்து சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் 7 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில கவர்னர்கள் மற்றும் முதல்வர்கள் மற்றும் பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பங்கேற்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ம் தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதுவையில் வரும் 22ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்காது. மேலும், புதுச்சேரி இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜிப்மரில் 22ம் தேதி ஓபிடி இயங்காது
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜிப்மர் நிறுவனம் 22ம் தேதி மதியம் 2.30 மணி வரை அரைநாள் இயங்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த நேரத்தில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு (ஓபிடி) வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். சிறப்பு கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனை சேவைகளும் மதியம் 2.30 மணிக்கு பிறகு வழக்கம் போல் முழுமையாக செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுவையில் 22ம் தேதி பொது விடுமுறை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: