குடியரசு தின கிராமசபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

 

மதுரை, ஜன. 20: மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும். ஜன.26ம் தேதி குடியரசு தின கிராமசபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான ஜன.26ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், 2023-2024ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப்பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-2025ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், தூய்மை பாரத் இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் போன்ற கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த கிராம சபைக்கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post குடியரசு தின கிராமசபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: