ஆஸி. ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, 16 வயது ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை டயேன் பாரியுடன் (21 வயது, 72வது ரேங்க்) நேற்று மோதிய ஆண்ட்ரீவா (47வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், 2வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-1 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் சிறப்பாக விளையாடி பாரியின் சர்வீசை முறியடித்த ஆண்ட்ரீவா 1-6, 6-1, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் 2 மணி, 23 நிமிடம் போராடி வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் சபலெங்கா (பெலாரஸ்), கோகோ காஃப், அனிசிமோவா (அமெரிக்கா), மெக்தலினா ஃபிரெக் (போலந்து), மார்தா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் முன்னணி வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), யானிக் சின்னர் (இத்தாலி), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.), கரென் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோர் வெற்றியை வசப்படுத்தி 4வது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் – எட்வர்ட் வின்டர் ஜோடியை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தது.

The post ஆஸி. ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா appeared first on Dinakaran.

Related Stories: