தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும்: பிரதமர் மோடி பேச்சு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்கவிழா பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல் முருகன், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு விழாவை தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது; விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்வதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். “அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்” திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார்.

நாடெங்கிலும் இருந்து சென்னை வந்திருக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். 1975-ல் தொடங்கப்பட்ட சென்னை தூர்தர்ஷன் இன்று முதல் ஒரு புதிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. 2024ம் ஆண்டு விளையாட்டு துறைக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும். விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் பல சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்தியுள்ளோம். மல்லர்கம்பம் போன்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகளும் கேலோ இந்தியா போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. கடற்கரை விளையாட்டுகள் மற்றும் சுற்றுலாதுறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை படைத்து வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் படம் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரமங்கை வேலுநாச்சியார் பெண் சக்திகளின் அடையாளமாக திகழ்ந்தவர். அனைத்து தரப்பு மக்களும் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்ற கேலோ இந்தியா போட்டி வழிவகுக்கிறது. விளையாட்டுடன் கூடிய பிற துறைகளையும் மேம்படுத்தி வருகிறோம். 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

The post தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: