லோயர்கேம்ப் பகுதி விவசாய நிலங்களில் காட்டுயானை நடமாட்டம் : விவசாயிகள் அச்சம்

கூடலூர் : கூடலூர் நகராட்சி 21வது வார்டு பகுதியாக உள்ள லோயர்கேம்ப் பளியன்குடி, கீழ்கண்ணகி கோவில் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு மானாவாரி விவசாய நிலப்பகுதியாக உள்ளது. இந்த விவசாய நிலத்தினை ஒட்டி வனப்பகுதி உள்ளதால், அவ்வப்போது யானை, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நிலத்தை சேதப்படுத்துவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் விவசாய வேலைக்காக நாள்தோறும் விவசாயிகள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அந்த பகுதியில் நேற்று காலை விவசாய வேலைக்கு சென்ற விவசாயிகள் விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடமாடுவதை பார்த்து உள்ளனர். இதனால் அச்சம் அடைந்து விவசாயிகள் அங்கிருந்து வேலைக்குச் செல்லாமல் வெளியேறி உள்ளனர். தொடர்ந்து காட்டுயானை அதே பகுதியில் நடமாடி வருவதால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் அச்சத்துடன் தவித்து வருகின்றனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாய நிலப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. விவசாய நிலத்தில் புகுந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனவிலங்குகளிடமிருந்து விளைநிலத்தைக் காக்க விவசாய நிலத்தை ஒட்டிய வன எல்லைப்பகுதியில் அகழியோ, மின்வேலியோ அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து கூடலூர் வனச்சரகர் முரளீதரன் கூறுகையில், ‘‘விவசாய நிலப்பகுதிக்கு காட்டுயானை வந்த தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒற்றையானையை வனத்தின் உள்பகுதிக்கு விரட்டினர். மேலும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

The post லோயர்கேம்ப் பகுதி விவசாய நிலங்களில் காட்டுயானை நடமாட்டம் : விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: