உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் பெருமாள் கோயில் பார்வேட்டை திருவிழா

உத்திரமேரூர், ஜன.18: உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயிலில் பார்வேட்டை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த, திருமுக்கூடல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அப்பன் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில், ஆண்டுதோறும் தை 2ம் நாளில் பார்வேட்டை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்காக, காலை, 7 மணிக்கு, காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட வரதராஜபெருமாள், மாலை 4 மணிக்கு பழையசீவரம் மலையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் வந்தடைந்தார்.

அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்ம சுவாமி எழுந்தருளினார். மங்கள வாத்தியங்கள் முழங்க அப்பகுதியில் உள்ள பாலாற்றின் வழியாக திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடேச பெருமாள் கோயிலை வந்தடைந்தார். அங்கு, சாலவாக்கம், சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட, ஐந்து சுவாமிகளும், தங்களுக்கான தனித்தனி மண்டபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பால், தயிர் பன்னீர், இளநீர், பழ வகைகள் மற்றும் வாசனை திரவியங்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நிறைவாக, ஐந்து சுவாமிகளும், இரவு திருமுக்கூடல் வழியாக அந்தந்த பகுதி கோயில்களுக்கு ஊர்வலமாக சென்றடைந்தனர்.

The post உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் பெருமாள் கோயில் பார்வேட்டை திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: