அயோவா உள்கட்சி தேர்தலில் படுதோல்வி எதிரொலி அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவதாக அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி வேட்பாளர் விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப்(77), தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே(51) மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி(38) ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உள்கட்சி தேர்தல் நேற்று முன்தினம் அயோவா மாகாணத்தில் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 51.9 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார். ரான் டி சான்டிஸ் 21.2 சதவீத வாக்குகள் பெற்று 2ம் இடத்தையும், நிக்கி ஹாலே 19.1 சதவீத வாக்குகளுடன் 3ம் இடத்தையும், விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளுடன் 4ம் இடத்தையும் பிடித்தனர். அயோவா உள்கட்சி தேர்தலில் முதலிடம் பெற்றதையடுத்து டிரம்ப் வெற்றி பெற்றவராக அறிவிப்பட்டார். உள்கட்சி தேர்தலில் படுதோல்வியடைந்த இந்திய வம்சாவளி வேட்பாளர் விவேக் ராமசாமி அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த விவேக் ராமசாமி, “நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட எந்த வழியும் இல்லை என்பதை உணர்வதால் போட்டியிலிருந்து விலகி டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

The post அயோவா உள்கட்சி தேர்தலில் படுதோல்வி எதிரொலி அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: