பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இரு நாட்களில் 1.77 லட்சம் மக்கள் பயணம்

 

கோவை, ஜன. 14: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1.77 லட்சம் மக்கள் வெளி மாவட்டம் புறப்பட்டு சென்றுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால், கோவையில் தங்கி வேலை பார்க்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். தொடர் விடுமுறை காரணமாக பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று இரவு வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு கோவை சிங்காநல்லூர், காந்திபுரம், சூலூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கோவை கோட்ட அரசு இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘பொங்கல் விடுமுறையில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவை கோட்டத்தில் 1109 பேருந்துகள் நேற்று முன்தினம் முதல் இன்று இரவு வரை இயக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு மக்கள் அதிகளவில் புறப்பட்டு சென்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் (வெள்ளி, சனி) கோவை மாவட்டதில் இருந்து சுமார் 1.77 லட்சம் மக்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்’’ என்றார்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இரு நாட்களில் 1.77 லட்சம் மக்கள் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: