திமுக சார்பில் வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: சென்னை அண்ணாநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: திமுக சார்பில் வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. சென்னை அண்ணாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: அன்னை தமிழ்காக்க, முதற்கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறை சென்ற நடராசன் 15.1.1939 அன்றும், தாளமுத்து 12.3.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர்.

தமிழக மக்களின் தொடர் போராட்டத்தால் அரசு 21.2.1940ல் கட்டாய இந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு வந்தது. அன்னை தமிழின் அருந்தவப் புதல்வர்களாம்- கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், தீக்குளித்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவு கூர்ந்திடும் நாள் தான் வருகிற 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்.

உலக வரலாற்றில், நாட்டின் விடுதலைக்காக, இனப்போராடத்திற்காக தங்களை மாய்த்துக் கொண்டோர் நிரம்ப உண்டு. ஒரு மொழிக்காக, தங்களது வாழ்க்கையையே சுருக்கி கொண்டு-கருகியவர்கள் உண்டு என்றால், அது தமிழ் மக்களையே சாரும். இந்தியை திணிக்க முயன்றோருக்கும், முயல்வோருக்கும் அச்சத்தை உருவாக்கிவிட்டு சென்றுள்ள மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திட, பொதுக்கூட்டங்கள் நடத்தி அவர்கள் கொண்டிருந்த தூய தமிழுணர்வுடன் நாமும் வாழ்ந்திட வேண்டும் என்ற சூளுரையை இந்நாளில் மேற்கொண்டிட திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரை, திமுக மாணவர் அணியின் சார்பில் உரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஆவடி-பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, சா.மு.நாசர் எம்எல்ஏ, சி.ஜெரால்டு. திருச்சி-முதன்மை செயலாளர் கே.என்.நேரு, கரூர் முரளி, அல்லூர் பி.எம்.ஆனந்த், காஞ்சிபுரம்- பொன்முடி, க.சுந்தர் எம்எல்ஏ, நா.சே.பிரபாகரன். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்-அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், கும்மிடிப்பூண்டி-திருச்சி சிவா எம்பி,

டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்எல்ஏ, கதிர் மீனாட்சி சுந்தரம், திருவள்ளூர்-தயாநிதிமாறன் எம்பி, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, புலவர் சாமிநாகப்பன், திருச்சி கிழக்கு மாநகரம்-அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரத்தநாடு நடராஜன், மதுராந்தகம்-அன்னியூர் சிவா, மங்கலம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மற்ற பகுதிகளில் பங்கேற்று உரையாற்றுவோர் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

The post திமுக சார்பில் வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: சென்னை அண்ணாநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: